செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
மத்திய
அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு “பேஸ்புக்”- நிறுவனத்துடன்
இணைந்து “100 சாதனைப் பெண்களை தேர்வு
செய்யும்” திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று தொடங்கியது. பல்வேறு
துறைகளில் இந்திய அளவில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய 100 சாதனைப் பெண்களை கண்டெடுத்து பாராட்டுவது இந்த
திட்டத்தின் முக்கிய அம்சமாகும். முதல் கட்டமாக
இத்தகைய பெருமைமிகு சாதனைகளை பல்வேறு துறைகளில் புரிந்து வரும் பெண்களை முன்மொழியும்
பணி 15.07.2015 அன்று தொடங்கி 30.09.2015 அன்று நிறைவு பெற்றது.
ஆயிரக்கணக்கில் முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்
துறையால் பெறப்பட்டது.
இரண்டாம்
கட்டமாக அவ்வாறு பெறப்பட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 200 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பெண்களில் 100 பெண்களை இணையம் மூலமாக
வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யும் முறை நவம்பர் 7, 2015 அன்று தொடங்கியது. வாக்கெடுப்பு நிறைவு பெற்ற நிலையில் தேர்வு
செய்யப்பட்ட 100 பெண்களின் இறுதிப் பட்டியலை
மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த 01.01.2016 அன்று அறிவித்தது.
செல்வி.கிருத்திகா
ரவிச்சந்திரனுக்கு கலைத்துறையில் சிறப்பான சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார
மையத்தின் செரிமோனியல் அரங்கில் பாரதக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி
அவர்கள் 22.01.2016 அன்று வழங்கினார்.
செல்வி.கிருத்திகாவின்
பரதநாட்டியப் பயிற்சி புதுச்சேரி பால் பவனில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, திரு.கிருஷ்ணன்,
திருமதி.சண்முகசுந்தரி, ஆகியோரிடம் பரதம் கற்றார்.
திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு மாணவியாக இன்றும் பரதம்
கற்று வருகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி, பாரதிதாசன்
மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கனிணியில்
முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தில் பரதக்
கலையில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டப் படிப்பினை முடித்துள்ளார். கனிணிப் பிரிவில்
பாண்டிச்சேரி எஞ்ஜினியரிங்க் கல்லூரியில் (P.E.C) பகுதி நேர ஆய்வு மாணவியாக படித்து
வருகிறார்.
சைனாவில்
நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று பிஜிங்க், ஷங்காய், நாஞ்ஜிங்க் ஆகிய
இடங்களில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வியட்நாம் நாட்டில் ஆகிய இடங்களில்
பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரத நாட்டிய
நிகழ்ச்சகள் நடத்தியுள்ளார். சமீபத்தில் அந்தமானின் போர்ட்பிளேயரில் நடைபெற்ற தீவுச்
சுற்றுலா திருவிழாவில் (ISLAND TOURISM FESTIVAL – I.T.F) பங்கேற்று அந்தமான் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தேசிய விருதுகளையும், சமூக, கலாச்சார அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் திருக்குறளின் பெருமையினை உலகுக்கு உணர்த்துவதற்காக மாபெரும் கின்னஸ் சாதனை
நிகழ்வினை விரைவில் நடத்த உள்ளார்.
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் புதுச்சேரி
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.




